

பிரதமர் பதவியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கு அவர் கடுமையாக போராடி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் 3 முறையும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன்படி அடுத்த மாதம் 23 ந் தேதி அங்கு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு எதிரான ஊழல் விசாரணை தொடங்கியுள்ளது. நண்பர்களிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆடம்பரப் பொருள்களைப் பரிசாகப் பெற்றதாகவும், அந்த நாட்டு நாளிதழ்களில் தனக்கு சாதகமாக செய்திகளை பிரசுரிக்கச் செய்வதற்காக வர்த்தக உதவிகள் செய்ததாகவும் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் என 3 மிகப்பெரிய வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் மீதான விசாரணை ஜெருசலேம் கோர்ட்டில் நேற்று தொடங்கியது. இதையொட்டி பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கோர்ட்டில் ஆஜரானார். அப்போது அவரது தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பெஞ்சமின் நேட்டன்யாஹூ குற்றவாளி அல்ல என்பதை வலியுறுத்தும் எழுத்துப்பூர்வ பதிலை நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். அதன்பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இஸ்ரேலில் பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர் மீது கோர்ட்டில் ஊழல் வழக்கு விசாரணை நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.