கொரோனா தீவிரத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள்; ஆய்வில் புதிய தகவல்

அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறுவதற்காக இதன் இடைக்கால ஆய்வு முடிவுகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தீவிரத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள்; ஆய்வில் புதிய தகவல்
Published on

கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக கண்டறியப்பட்ட மாத்திரையை கோவிட் நோய் சிகிச்சைக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி அளித்தது.

மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள், இணைந்து கொரோனா சிகிச்சைக்கான மாத்திரையை தயாரித்துள்ளன. 'மோல்நுபிராவிர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரை, பரிசோதனைகளின் போது இறப்புகளையும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையையும் 50 சதவிகிதம் வரை குறைத்ததாக தெரிகிறது. இந்த மாத்திரைக்கு உலகின் முதல் நாடாக, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனாவால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 89 சதவீதம் வரை குறைக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. பைசர் நிறுவனத்தின் ஆண்டிவைரல் மாத்திரையின் பரிசோதனை முடிவுகள், பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின் மோல்நுபிராவிர் மாத்திரையை விட அதிக அளவு செயல் திறன் கொண்டதாக தரவுகள் காட்டுகின்றன.

எனினும், முழுமையான பரிசோதனை முடிவுகளின் தரவுகளை இரு நிறுவனங்களுமே வெளியிடவில்லை. ஆனால், பல தரப்பட்ட ஆய்வுகளின் முதல் கட்ட விளைவுகளை ஒப்பிடும் நடவடிக்கையை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதேவேளையில், பைசர் நிறுவனம் தங்களின் கொரோனா எதிர்ப்பு மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் (எப்.டி.ஏ) சமர்பிக்க திட்டமிட்டுள்ளது.

அதேபோல், சர்வதேச மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்புகளும் மாத்திரையை அங்கீரிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம் கோர உள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் எப்.டி.ஏ சில வாரங்களுக்கு உள்ளாகவோ அல்லது மாதங்களுக்கு உள்ளாகவோ பைசர் நிறுவனத்தின் கொரோனா எதிர்ப்பு மாத்திரையை அங்கீகரிப்பது தொடர்பான தனது முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.

ஆண்டிவைரல் மாத்திரை ஒன்றுடன் பைசர் நிறுவன கொரோனா எதிர்ப்பு மாத்திரையை எடுத்துக்கொண்ட நோயாளிகளில் 89 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பு அபாயம் குறைந்து இருப்பதாக பைசர் நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. இந்த மருந்தை உட்கொண்டவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் 775 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் பங்கேற்றவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆவர். அதோடு லேசானது முதல் மிதமான அறிகுறிகளுடன் கொரோனா பாதித்தவர்கள். உடல் பருமன் மற்றும் நீரிழிவு அல்லது இதய நோய் பாதிப்பு இருந்தவர்கள் என்பதால் அதிக அபாயம் நிறைந்த நோயாளிகளாக கருதப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com