

லண்டன்,
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் வரை அவசரகால அதிகாரங்களை நீட்டிப்பதற்கு ஆதரவாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒப்புதல் அளித்தது, மேலும் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தையும் அவர்கள் அங்கீகரித்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள குடிமக்கள் அனைவரும் இலவசமாக வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் ராபிட் விரைவுச் சோதனை செய்யப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வது தான் சிறந்த வழி. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். அதனால் தற்போது இங்கிலாந்தில் உள்ள அனைவருக்கும் இலவச விரைவுச் சோதனை செய்வதற்கான வழிவகைகள் செய்துவருகிறோம். 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு விரைவுச் சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தலாம். மேலும் பள்ளிகளில் வழக்கமான சோதனைகள் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அங்கு இலவசமாக விரைவுச் சோதனை செய்யப்படுகிறது. மேலும் நாட்டில் இதுவரை 31.4 லட்சம் பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.