

ரியாத்,
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. இதனால் அந்த நாட்டு அரசு வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட இந்த கட்டுப்பாடுகள், கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் காரணமாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதை தொடர்ந்து நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி சமூக இடைவெளி கடைப்பிடித்தல், பொது இடங்களில் கட்டாயமாக முக கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல் பிறநாடுகளில் இருந்து சவுதி அரேபியா வரும் பயணிகள் இனி கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும், கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.