

லண்டன்,
கொரோனா அச்சம் காரணமாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் யாராக இருந்தாலும், குறைந்த பட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், மீறினால் கடும் அபராதம் என்று இங்கிலாந்து அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டு இருந்தது. எனினும் தற்போது வைரஸின் பரவல் குறைய, குறைய இங்கிலாந்து அரசு தன்னுடைய பயணக்கட்டுப்பாட்டில், சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது வெளிநாட்டுப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தும் நாட்கள் 14-ல் இருந்து 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கான சுய தனிமை படுத்தல் காலமும் 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது
உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பணி துவங்கியுள்ளது. பைஸர்-பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக 95 சதவீதம் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்ததையடுத்து, இங்கிலாந்து சுகாதாரத்துறை, மருந்து மற்றும் சுகாதாரத்துறை பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை பைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த அரசுக்கு அனுமதி வழங்கியது.