

லண்டன்,
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,660 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 51,91,459 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 43 லட்சத்து 68 ஆயிரத்து 126 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 6,94,852 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக வருகிற 19ந்தேதி முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். மேலும் வருகிற 19ந்தேதி முதல் முக கவசம் அணிவது கட்டாயமல்ல என தெரிவித்த ஜான்சன், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன என அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டார்.
இதனிடையே அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது ஆபத்து என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நெருக்கடியான பொது இடங்களில் மக்கள் முக கவசங்களை அணிய வேண்டும் என பரிந்துரைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.