கச்சா எண்ணைய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு

உக்ரைன் போருக்குப் பிறகு எண்ணெய் விலைகள் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை
கச்சா எண்ணைய் விலை  4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Published on

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 10-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரானும் உக்கிரமாக தாக்குவதால் வளைகுடாவில் பதற்றம் நீடிக்கிறது. இதன் தொடர்ச்சியாக ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5-ல் ஒரு பகுதி பொதுவாக ஹார்மூஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. போர் தொடங்கியதில் இருந்து இந்த பாதை வழியாகப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய இந்த பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கு (இந்திய ரூபாயில் ரூ.9,221.34) மேல் உயர்ந்தது.

இன்று காலை ஆசியாவில், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 18 சதவீதம் உயர்ந்து 109.25 டாலராகவும் (ரூ.10,076.08), நிமெக்ஸ் லைட் ஸ்வீட் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து 109.37 டாலராகவும் (ரூ.10,090.41) இருந்தது. ஜலசந்தி போக்குவரத்து இந்த மாத இறுதி வரை நிறுத்தப்பட்டால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலரைத் தாண்டி (ரூ.13,841.80) எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதே தவிர அமெரிக்கா அல்ல என்று டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரல் 100 டாலரை கடந்து கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு எண்ணெய் விலைகள் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை. ஈரான் போர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை சீர்குலைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com