

ஹவானா,
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடையால், கியூபா நாட்டில் வரலாறு காணாத மருத்துவ மற்றும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உயிர் பிழைப்பு விகிதம் 85 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக குறைந்துள்ளதாக கியூபா அரசு கவலை தெரிவித்துள்ளது.
போதிய மூலப் பொருட்கள் இல்லாததால் 300 அத்தியாவசிய மருந்துகள் தயாரிக்க முடியாமல் முடங்கியுள்ளன. மேலும், ஒரு லட்சம் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி பால் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், 16 வகையான குழந்தை தடுப்பூசித் திட்டமும் ஆபத்தில் உள்ளது.
சுமார் ஒரு லட்சம் மக்கள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அமெரிக்காவின் தடையால் ஐ.நா.வின் அவசர உணவு மற்றும் மருந்துப் பொருட்களும் கியூபாவிற்குள் வர முடியாமல் எல்லையிலேயே முடங்கியுள்ளன. இதனால் கியூபா மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதார தடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், குறிப்பாக சுகாதாரத் துறையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கியூபா தனது தேசிய அறிவியல் மற்றும் மருத்துவ வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.