லைவ் அப்டேட்ஸ்: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு

இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில் முப்படைகளுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Photo Credit: AP
Photo Credit: AP
Published on

கொழும்பு,

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறது. இலங்கையில் நடைபெறும் அடுத்தடுத்த முக்கிய நகர்வுளை அண்மைச் செய்திகளாக கீழ் காணலாம்.

9.00 PM

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் காலை 7 மணி வரை ஊரடங்கை நீட்டித்து இலங்கை அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

7.30 PM

இலங்கையில் துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைக்கும் அனுமதி

இலங்கையில் இரண்டு நாட்களாக வன்முறை வெடித்துள்ள நிலையில் முப்படைகளுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் சொத்துக்களை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கு அனுமதி அளித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் காவல்துறையால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7.00 PM

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து திங்களன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகியது தொடர்பாக நேற்றிரவு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், இலங்கையில் போராடி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

இலங்கை முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்சேவின் வீடு, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்த வன்முறையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக இலங்கை போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. . படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2.00 PM

ஊரடங்கை மீறி இலங்கையில் மக்கள் போராட்டம் நீடிப்பு

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே குடும்பம், ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் தலைநகர் கொழும்புவில் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தில் நேற்று பயங்கர வன்முறை வெடித்தது. இதையடுத்து, இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று ஊரடங்கை மீறி பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்பு நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1.30 PM

இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்; கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் கைதிகள் தப்பியோட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

12.00 PM

மக்கள் கொந்தளிப்பையடுத்து இலங்கை முன்னாள் பிரதமர் ராஜபக்சேவின் குடும்பம் வெளிநாடு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்படை தளத்தில் இருந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பி ஓட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடற்படை முகாமை முற்றுகையிட்ட மக்கள் அங்கு முழக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10.40 AM

மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும்; எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்று வந்த போராட்டத்தில் மகிந்த ராஜபக்சே வன்முறையை தூண்டியதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. வன்முறையை கட்டவிழ்த்து விட்டதற்காக ராஜபக்சே கைது செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

10.05 AM

இலங்கையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறியது ஏன் என விளக்கம் கோரி காவல்துறை, ராணுவத்திற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

9.30 AM

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று அந்நாட்டு சபாநாயகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

9.00 AM

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள், போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்ந்து வன்முறையாக வெடித்தது. நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இலங்கை வன்முறையில் இதுவரை 7 பேர் பலியாகினர். 231 பேர் காயம் அடைந்தனர்.

8.50 AM

பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே பிரதமருக்கான சொகுசு பங்களாவான அலரி மாளிகையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார்.

8.00 AM

இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், அமலில் உள்ள ஊரடங்கு நாளை காலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .

7.00 AM

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் இன்று அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். இலங்கையில் உச்ச கட்ட பதற்றம் நிலவும் சூழலில், அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com