இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் நிபந்தனைகளுடன் கூடிய ஒரு சில தளர்வுகளை அறிவித்து, ஊரடங்கு நடைமுறையை பிரதமர் போரிஸ் ஜான்சான் மாற்றியமைத்துள்ளார்.
இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நிபந்தனைகளுடன் கூடிய ஒரு சில தளர்வுகளை அறிவித்து, ஊரடங்கு நடைமுறையை பிரதமர் போரிஸ் ஜான்சான் மாற்றியமைத்துள்ளார். தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது இதுபற்றி அவர் கூறியதாவது:-

ஜூன் 1-ந் தேதிக்கு பிறகு பள்ளிகளும், கடைகளும் படிப்படியாக திறக்கப்படும். அதேசமயம் மக்கள் அதிகமாக கூடும் சில முக்கிய இடங்கள் ஜூலை 1-ந் தேதிதான் திறக்கப்படும். இங்கிலாந்துக்கு விமானம் மற்றும் கப்பல் மூலம் வரும் வெளிநாட்டினர், உள்நாட்டினர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

வீட்டுக்குள் செய்ய முடியாத பணியில் ஈடுபடுபவர்கள் அதாவது கட்டுமானம், உற்பத்தி துறையில் இருப்பவர்கள் பணிக்கு திரும்பலாம். மக்கள் பெரும்பாலும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மக்கள் வெளியே வந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக கோல்ப், டென்னிஸ், மீன் பிடித்தல் போன்றவற்றில் குடும்பத்தினருடன் ஈடுபடலாம். ஜூலை மாதத்தில் உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் திறக்கப்படும்.

இந்த புதிய அனுமதியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் உடனடியாக கட்டுப்பாடுகள் தளர்வு நிறுத்தப்படும். இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

போரிஸ் ஜான்சனின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் மக்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com