ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இப்படியும் ஒரு விபரீதம்: 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் - ஐ.நா. ஆய்வில் தகவல்

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல், உலகம் முழுவதும் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என்று ஐ.நா. அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இப்படியும் ஒரு விபரீதம்: 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் - ஐ.நா. ஆய்வில் தகவல்
Published on

நியூயார்க்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் தாக்கம் குறித்து ஐ.நா. மக்கள்தொகை நிதியம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனாவின் தாக்கமும், அதன் எதிர்வினையும் உலகம் முழுவதும் எப்படி விரிவடையும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதே சமயத்தில், பெண்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த இந்த ஆய்வை வெளியிட்டுள்ளோம்.கொரோனா பாதிப்பு காரணமாக, ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. பெண்களும், வைரஸ் தாக்கும் அச்சத்தில், வழக்கமான பரிசோதனைகளுக்கு கூட ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதில்லை.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பொருட்கள் வருகை தடைப்பட்டுள்ளது. இதனால் கருத்தடை சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.

உலகம் முழுவதும், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 114 நாடுகளில் சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், தட்டுப்பாடு காரணமாக, 4 கோடியே 70 லட்சம் பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும். இதனால், வரும் மாதங்களில், 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்.

மேலும், ஆண்களும், பெண்களும் வீட்டிலேயே இருப்பதால், மோதல் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. 6 மாதங்களில், 3 கோடியே 10 லட்சம் மோதல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என்று கணித்துள்ளோம். 3 மாதங்கள் ஊரடங்கு நீடித்தால், மேலும் ஒரு கோடியே 50 லட்சம் மோதல் நிகழ்வுகள் நடக்கும்.

அத்துடன், குழந்தை திருமணங்கள் லட்சக்கணக்கில் அதிகரிக்கவும் இந்த ஊரடங்கு வழிவகுக்கும். இவற்றையெல்லாம் தடுப்பதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com