‘இணைய தாக்குதலுக்கு வடகொரியாதான் பொறுப்பு’ அமெரிக்கா குற்றச்சாட்டு

150 நாடுகளில் 3 லட்சம் கம்ப்யூட்டர்களில் கடந்த மே மாதம் நடந்த இணைய தாக்குதலுக்கு காரணம் வடகொரியாதான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
‘இணைய தாக்குதலுக்கு வடகொரியாதான் பொறுப்பு’ அமெரிக்கா குற்றச்சாட்டு
Published on

வாஷிங்டன்,

உலகமெங்கும் உள்ள 150 நாடுகளில் 3 லட்சம் கம்ப்யூட்டர்களில் கடந்த மே மாதம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டது. இது வங்கிச்சேவையிலும், சுகாதார சேவையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியது.

இணைய தாக்குதல் நடத்தி முடக்கிய ஒவ்வொரு கம்ப்யூட்டரையும் மீண்டும் செயல்பட வைப்பதற்கு 300 டாலர் முதல் 600 டாலர் வரையில் பிட்காயின்களை (இணையவழி பணம்) செலுத்துமாறு கணினி திரையில் தோன்றிய வானாகிரை புரோகிராம் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்த இணைய தாக்குதலுக்கு காரணம் வடகொரியாதான் என்று அமெரிக்கா நேற்று குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பில் ஜனாதிபதி டிரம்பின் உதவியாளராக செயல்பட்டு வருகிற தாமஸ் பொசர்ட், வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகையில் எழுதி உள்ள கட்டுரையில், கம்ப்யூட்டர்களில் நடத்தப்பட்ட இணைய தாக்குதலுக்கு வடகொரியாதான் நேரடி பொறுப்பு. ஆதாரத்தின் அடிப்படையில்தான் இதைச் சொல்கிறோம். இது போன்ற இணைய தாக்குதலை தடுப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணைய தாக்குதலுக்கு வடகொரியாதான் காரணம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டியது இதுவே முதல் முறை. அமெரிக்காவை போன்று இங்கிலாந்தும் வடகொரியா மீது கடந்த நவம்பர் மாதம் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com