வங்காளதேசத்தில் கரையை கடந்தது சித்ரங் சூறாவளி புயல்; 5 பேர் உயிரிழப்பு

வங்காளதேசத்தில் கரையை கடந்த சித்ரங் சூறாவளி புயலுக்கு 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
வங்காளதேசத்தில் கரையை கடந்தது சித்ரங் சூறாவளி புயல்; 5 பேர் உயிரிழப்பு
Published on

டாக்கா,

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த சித்ரங் சூறாவளி புயலின் முன்பகுதி நேற்று மாலை, சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் கரையை அடைந்தது. இதனை தொடர்ந்து, புயல் கரையை தொட்டதும் வலுவிழந்தது.

இதன்பின்னர், சிட்டகாங் மற்றும் பரிசால் கடற்கரை பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் சூறாவளி புயல் கரையை கடந்து உள்ளது. சூறாவளி புயலால் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது என அந்நாட்டு வானிலை ஆய்வு மைய தலைவர் அபுல் கலாம் மாலிக் கூறியுள்ளார்.

புயலால் கனமழை பெய்யும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இந்த புயல் ஏற்படுத்திய பாதிப்புக்கு, 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் புயல் கரையை கடந்த நிலையில், அதனை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இந்த புயல் அந்நாட்டின் தெற்கு பகுதியில் விரைவாக நகர்ந்து செல்கிறது. இதனால், வங்காள விரிகுடாவில் இருந்து நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவில் உள்ள டாக்கா நகரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன.

அந்த பகுதியிலுள்ள சாலைகள் கனமழையால் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. பர்குனா, நரைல், சிராஜ்கஞ்ச் மற்றும் போலா ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

வங்காளதேச எல்லை மற்றும் இந்தியாவின் அசாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியே இன்று காலை 6 மணிக்கு பின்னர் இந்த சூறாவளியானது கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com