டிட்வா புயலால் இலங்கையில் மீண்டும் மண்சரிவு; 20 குழந்தைகள் உள்பட 120 பேர் மாயம்

இலங்கை அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
டிட்வா புயலால் இலங்கையில் மீண்டும் மண்சரிவு; 20 குழந்தைகள் உள்பட 120 பேர் மாயம்
Published on

கொழும்பு,

இலங்கையில் நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 69 பேர் பலியாகி உள்ளனர். 34 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் இன்று வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று, கனமழை தொடர்ச்சியாக 63 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 2.19 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன. 666 வீடுகள் பகுதியளவாக சேதமடைந்து உள்ளன. பொதுமக்கள் அவசர உதவிக்கு 117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிகளை முடுக்கி விடும்படியும் மற்றும் தடையில்லா நிவாரண உதவி கிடைக்கவும் வழி செய்திடும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகே உத்தரவிட்டு உள்ளார். மீட்பு பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், அண்டை நாடான இந்தியா முன்வந்துள்ளது. இலங்கையில் பேரிடரை முன்னிட்டு, இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நிவாரண உதவிக்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து, இந்திய விமான படையின் சி-130 ஜே விமானத்தில் இன்று காலை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு பொருட்கள் உள்ளிட்ட 12 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில், 20 குழந்தைகள் உள்பட 120 பேர் சிக்கி காணாமல் போயுள்ளனர். இதேபோன்று அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 380 கி.மீ. தொலைவில் குறிப்பிடும்படியாக வடக்கு இலங்கை பகுதியில் மையம் கொண்டுள்ளது. இந்த சூழலில், இலங்கையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com