பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்


பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
x
தினத்தந்தி 17 Jun 2025 11:14 AM IST (Updated: 17 Jun 2025 12:16 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

நிகோசியா,

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரசுக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார்.

அத்துடன் நேற்று அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து உயர்மட்டக்குழு மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரதமர் மோடியுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், வெளியுறவுச்செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட குழுவினரும் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான '3-ம் மக்காரியோஸ் ஆணைக்குரிய கிராண்ட் கிராஸ்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கி கவுரவித்தார். விருதை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அதை இரு நாடுகளின் நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று நிகோசியா வரலாற்று மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவரை வரவேற்க சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அங்கு இருந்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு கை கொடுத்து வரவேற்ற சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேலா கைத்ரியோட்டி மலாபா திடீரென அவரது காலை தொட்டு வணங்கினார். உடனே பிரதமர் மோடி உறுப்பினரின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

1 More update

Next Story