அமெரிக்காவில் வசிக்கும் 5.5 கோடி பேரின் விசாக்கள் மறுபரிசீலனை.. இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படுமா..?

விசாவில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களை பெற்று அங்கு வசிக்கிறார்கள். இதனிடையே அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. எனவே சட்டவிரோதமாக குடியேறிவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட ஏராளமானோர், அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். இந்தநிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்த நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்தது.

இந்த சோதனையின்போது விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது முறைகேடாக விசா பெற்று இருப்பவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுவார்கள் என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ்தள பதிவில், அமெரிக்காவில் ஓடும் லாரிகளில் வெளிநாடுகளை சேர்ந்த டிரைவர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகிறார்கள். இது அமெரிக்க லாரி டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. எனவே இனி வெளிநாடுகளில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு, அமெரிக்க விசா வழங்குவது நிறுத்தப்படும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தாலும், அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டு லாரி டிரைவர்களின் எண்ணிக்கை குறித்து எதுவும் அவர் குறிப்பிடவில்லை.

இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்படுமா?

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எனவே, இந்த விசா சரிபார்ப்பு நடவடிக்கையில் இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் விதிகளை மீறியவர்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை என்பதால் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com