கிரீசில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டில் சரக்கு ரெயிலும், பயணிகள் ரெயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
கிரீசில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்: பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு
Published on

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சில் இருந்து அந்த நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான தெசலோனிகிக்கு நேற்று முன்தினம் இரவு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயிலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 350-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த ரெயில் நள்ளிரவில் டெம்பே என்ற நகருக்கு அருகே அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்திசையில் தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஒன்று எதிர்பாராதவிதமாக பயணிகள் ரெயில் சென்ற அதே தண்டவாளத்தில் வந்தது.

இதில் சரக்கு ரெயிலும், பயணிகள் ரெயிலும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. இதில் 2 ரெயில்களிலும் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி அருகில் உள்ள வயலில் விழுந்தன.

2 ரெயில்களும் அதிவேகத்தில் வந்து மோதிக்கொண்டதால் சில பெட்டிகள் முற்றிலுமாக உருக்குலைந்து போயின. சில பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. இதில் அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலம் எழுந்தது. 2 ரெயில்களும் மோதியபோது நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல அந்த பகுதியில் பயங்கர அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என 100-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

நள்ளிரவு நேரம் என்பதாலும், விபத்து நடந்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்திருந்ததாலும் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

எனினும் மீட்பு குழுவினர் 'பிளாஸ் லைட்'டுகளை பயன்படுத்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். அவர்கள் விபத்தில் உருக்குலைந்து கிடந்த ரெயில் பெட்டிகளை வெட்டி அதனுள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். விடியவிடிய மீட்பு பணிகள் தொடர்ந்தன.

எனினும் இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 26 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிர் திசையில் 2 ரெயில்கள் எப்படி வந்தது என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com