

மெக்ஸிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டில் தென்கடலோர பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு முன்பாக பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.1 புள்ளிகளாக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியது. இந்த நில நடுக்கம், சியாபாஸ் மாகாணத்தில் பிஜிஜியாபான் நகரில் இருந்து 54 மைல்கள் தொலைவில், பசிபிக் பகுதியில் 43 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நில நடுக்கம், மெக்சிகோ சிட்டியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மெக்சிகோ நகர விமான நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் தூள், தூளாயின. தலைநகரையொட்டிய பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கின.தூங்கிக்கொண்டிருந்த மக்கள் நில நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்து அலறியடித்தவாறு எழுந்து, வீதிகளுக்கும், திறந்தவெளி மைதானங்களுக்கும் வந்து தஞ்சம் புகுந்தனர்.
ஓக்சாகா மாகாணத்தின் பல பகுதிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின.
மெக்சிகோவில் 1985-ம் ஆண்டுக்கு பின்னர் இப்படி ஒரு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது இதுவே முதல்முறை.நில நடுக்கத்தால் பெரும்பாதிப்புகள் ஏற்பட்டதால் மெக்சிகோ சிட்டி, சியாபாஸ், ஹிடால்கோ, வெராகுரூஸ், குயர்ரெரோ, டபாஸ்கோ, ஓக்சாகா, பியூப்லா, டிலாக்ஸ்கலா பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.