ரஷியாவில் 28 பேருடன் சென்ற பயணிகள் விமானம் மாயம்

ரஷியாவில் 28 பேருடன் சென்ற பயணிகள் விமானம் மாயமானது.
ரஷியாவில் 28 பேருடன் சென்ற பயணிகள் விமானம் மாயம்
Published on

தரையிறங்கும் முன்பு மாயம்

ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது கம்சாட்கா தீபகற்பம். இங்குள்ள பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி நகரில் இருந்து பலானா நகருக்கு நேற்று காலை அன்டோனோவ் அன்-26' ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது.விமானத்தில் 22 பயணிகளும் 6 சிப்பந்திகளும் இருந்தனர். இந்த விமானம் பலானா நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. உடனடியாக, அதிகாரிகள் விமானத்தை தேடும் பணியை முடுக்கி விட்டனர்.

விமானத்தின் சிதைவுகள்

ரஷிய விமானப்படைக்கு சொந்தமான மீட்பு விமனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன.இதனிடையே மாயமான விமானத்தில் பலானா நகரின் மேயரான ஓல்கா மொகிரோவும் பயணம் செய்ததாக விமான நிறுவனம் தெரிவித்தது.பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பலானா விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன.

28 பேரின் கதி என்ன?

விமானத்தின் ஒரு சில பாகங்கள் தரையிலும், ஒரு சில பாகங்கள் கடலிலும் கண்டெடுக்கப்பட்டன. இதனால் விமானம் தரையில் விழுந்ததா அல்லது கடலில் விழுந்ததா என்பதை தெளிவுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. அதேசமயம் விமானத்தில் பயணம் செய்த 28 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பது துல்லியமாக உறுதி செய்யப்படும் வரை தேடுதல் வேட்டை தொடரும் என கம்சாட்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com