

வாஷிங்டன்,
விண்வெளியில் ஈர்ப்புவிசை இல்லாத சூழலில் உயிரினங்களின் கரு வளர்ச்சி எவ்வாறு அமைகிறது என்பதை அறிவதற்காக நாசா மேற்கொண்ட சோதனையில் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வெளியாகியுள்ளன.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 30 கருவுற்ற ஜப்பானிய காடை முட்டைகளை ஆய்வு செய்ததில், பூமியில் உள்ள முட்டைகளை விட விண்வெளியில் வளர்ந்த முட்டைகளின் கருக்களில் 4 மடங்கு அதிகமான அசாதாரண மாற்றங்களும் உடல் குறைபாடுகளும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உயிரினங்கள் விண்வெளியில் இயல்பாக இனப்பெருக்கம் செய்ய முடியுமா மற்றும் அவற்றின் கருக்கள் தடையின்றி வளருமா என்பதைச் சோதிக்க நாசா விஞ்ஞானிகள் இந்த விசித்திரமான ஆய்வை மேற்கொண்டனர். இந்த சோதனை 1995-ம் ஆண்டில் நாசா மற்றும் ரஷியாவின் கூட்டு விண்வெளித் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. இதற்காக 30 கருவுற்ற ஜப்பானிய காடை முட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ரஷியாவின் 'மிர்' விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டன.
நாசாவின் விண்வெளி வீராங்கனை ஷானன் லூசிட் விண்வெளி நிலையத்திற்குச் சென்றபோது, இந்த முட்டைகளையும் தன்னுடன் எடுத்துச் சென்று அங்குள்ள அடைகாப்பானில் வைத்தார். இதையடுத்து 16 நாட்களுக்கு பிறகு, பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்காக இந்த முட்டைகளின் கருக்களை அவர் பாதுகாப்பாக பதப்படுத்தினார். விண்வெளியில் மைக்ரோகிராவிட்டி எனப்படும் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை சூழலில் இந்த முட்டைகளின் கருக்கள் வளர்ந்தன. பின்னர், மேல்முன்னேற்ற ஆய்வுகளுக்காக இவை பத்திரமாகப் பூமிக்குக் கொண்டு வரப்பட்டன.
பூமிக்கு கொண்டு வரப்பட்ட முட்டைகளை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்தபோது, விண்வெளியின் பூஜ்ஜிய ஈர்ப்புவிசை கருவின் வளர்ச்சியைப் பெருமளவில் பாதித்திருப்பது தெரியவந்தது. பூமியில் அடைக்கப்பட்ட முட்டைகளின் கருக்களுடன் ஒப்பிடுகையில், விண்வெளியில் வளர்ந்த காடைகளின் கருக்களில் மரபணு மற்றும் உடல் சார்ந்த குறைபாடுகள் 4 மடங்கு அதிகமாக காணப்பட்டன.
ஈர்ப்புவிசை இல்லாத சூழல் உயிரினங்களின் ஆரம்பக்கட்ட உடல் உருவாக்கத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. மனிதர்கள் எதிர்காலத்தில் விண்வெளியில் நீண்ட காலம் தங்கி வாழ்வதற்கும், அங்கு புதிய தங்குமிடங்களை அமைப்பதற்கும் இத்தகைய சோதனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.