இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு

இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு
Published on

லண்டன்,

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 22 ஆண்டுகளில் இந்திய ராணுவ மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜ்நாத் சிங் இங்கிலாந்து செல்ல திட்டமிட்ட நிலையில், நெறிமுறை காரணங்களுக்காக இந்திய தரப்பால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 8-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து ராணுவ மந்திரி கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூனுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் தனது லண்டன் பயணத்தின் போது, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com