புயல், தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தாமதம்; 8 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்

மார்ச் மாதம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற 4 விண்வெளி வீரர்கள் தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர்.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டாமினிக், மைக்கேல் பராட் மற்றும் ஜீனெட் எப்ஸ், ரஷியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் கிரெபென்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

இந்த 4 பேரும் தங்கள் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் போயிங் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விண்கலம் விண்வெளி வீரர்கள் இன்றி கடந்த செப்டம்பர் மாதம் பூமிக்கு வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மில்டன் புயல் காரணமாக மீண்டும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகிய இரு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு 8 நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அவர்களும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்களின் ஆய்வுப் பணி 8 நாட்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கப்பட்டது. மேலும் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் சமீபத்தில் 2 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில், மார்ச் மாதம் விண்வெளிக்கு சென்ற 4 விண்வெளி வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தற்போது பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர். மெக்சிகோ வளைகுடாவில் புளோரிடா கடற்கரை அருகே இன்று அதிகாலை அவர்களது விண்கலம் பாராசூட் உதவியுடன் கடலில் விழுந்தது. பின்னர் விண்வெளி வீரர்கள் 4 பேரும் படகுகள் மூலம் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் 4 அமெரிக்கர்கள் மற்றும் 3 ரஷியர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com