

பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் மிஸ்ட்ரல் என்ற பெயரில் சிறிய ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு சாண்ட்விச் மற்றும் பீட்சா போன்ற துரித உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த ஓட்டலுக்கு சாப்பிட வந்த ஒரு நபர், ஓட்டல் ஊழியரிடம் சாண்ட்விச் ஆர்டர் செய்தார். ஆனால் அதைப்பரிமாற தாமதமானதாக கூறப்படு கிறது.
இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை அழைத்து, வாய் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் எல்லைக்கு சென்ற அந்த வாடிக்கையாளர் 28 வயதான ஓட்டல் ஊழியரை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அந்த ஊழியரின் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு துளைத்து அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். உடனே வாடிக்கையாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
உணவு வழங்க தாமதமானதால் ஓட்டல் ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த ஓட்டலின் சக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.