

டெல்டா வைரஸ்
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ் ஆகும்.இது மிகவேகமாக பரவுகிறது. உலகின் 135 நாடுகளுக்கு பரவி உள்ளது. உலகுக்கு கொரோனா வைரசை வழங்கிய சீனாவுக்கு இப்போது இந்த டெல்டா வைரஸ் சவாலாகவும், தலைவலியாகவும் மாறி உள்ளது.
ஜின்பிங் நிர்வாகம் போராடுகிறது
இந்த வைரஸ் பரவல், சீனாவை மட்டுமல்ல, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அவற்றின் தலைவர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வைத்துள்ளது.சீனா, இந்த டெல்டா வைரஸ் பரவலில் இருந்து
காத்துக்கொள்வதற்கு அங்குள்ள அதிபர் ஜின்பிங் நிர்வாகம் போராடி வருகிறது. அங்கு ஊரடங்கு போடும் நடவடிக்கைகளை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி புதுப்பிக்கிறது. 15 லட்சம் மக்களைக் கொண்டுள்ள நகரத்துக்கு செல்வது
துண்டிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில பகுதிகளில் மக்கள் பெருந்திரளாக பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தி மாறும்...
இதுபற்றி உகான் நகரில் கொரோனா உருவானபோது பிரபலமான ஷாங்காய் நகர டாக்டர் ஜாங் வென்ஹாங் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறி இருப்பதாவது:-
சமீபத்திய வைரஸ் பரவல்கள், வைரஸ் இன்னும் போய் விடவில்லை என்று காட்டுவதால் சீனாவின் உத்திகள் மாறலாம். இந்த வைரசுடன் இருப்பதற்கு உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கடுமையான சவால்கள்
தற்போதைய வைரஸ் பரவல் பற்றி சீன அரசின் நாளிதழான தி குளோபல் டைம்ஸ் கூறுகையில், சீனா கடுமையான வெற்றிக்கான போராட்டத்தில் இருக்கிறபோது, இந்த வைரஸ் பரவல் கடுமையான சவால்களை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளது.