நார்வே நாட்டில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றாரா பிரதமர் மோடி? இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவு

பிரதமர் மோடிக்கு நார்வே நாட்டின் உயரிய கவுரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டில் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றாரா பிரதமர் மோடி? இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவு
Published on

ஆஸ்லோ,

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, நெதர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளில் தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு நார்வே நாட்டிற்கு சென்றுள்ளார். அவரை, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

சமீபத்தில் ஐரோப்பிய தடையற்ற வர்த்த கூட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நார்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, 5-ம் அரசர் ஹரால்டு மற்றும் அரசி சொஞ்சா ஆகியோரை நேரில் சந்தித்து பேச உள்ளார். அதனுடன், நார்வே பிரதமர் ஸ்டோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

இந்த பயணத்தில், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், இரு நாடுகளின் உறவுகளில் உள்ள வளர்ச்சியை அவர் மறுஆய்வு செய்கிறார். அவற்றை இன்னும் வலுப்படுத்துவதற்கான வழிகளையும் அவர் ஆராய உள்ளார்.

இதேபோன்று, இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாடு நாளை ஆஸ்லோ நகரில் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், நார்வேயின் உயரிய கவுரவம் என கூறப்படும் கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வீஜியன் ஆர்டர் ஆப் மெரிட் என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. நார்வே 5-ம் அரசர் ஹரால்டு இதனை வழங்கினார்.

இதனிடையே, நார்வே நாட்டை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல்லே லிங் என்பவர், தனது ‘எக்ஸ்’ தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி நார்வே பிரதமரை சந்தித்துவிட்டு வெளியே செல்லும்போது அவரிடம் பத்திரிகையாளர் ஹெல்லே லிங், ‘உலகின் சுதந்திரமான பத்திரிகைத்துறையிடம் இருந்து சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லிவிட்டுச் செல்லலாமே?” என்று கேட்கிறார். ஆனால் பிரதமர் மோடி பதிலளிக்காமல் அங்கிருந்து செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.

இதனை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹெல்லே லிங், “இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அவர் பதிலளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை. உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது, இந்தியா 157-வது இடத்தில் பாலஸ்தீனம், எமிரேட்ஸ் மற்றும் கியூபாவுடன் போட்டியிடுகிறது. நார்வே அரசு எந்த நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துகிறதோ, அவர்களை கேள்வி கேட்பதும் எங்கள் கடமையாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், பத்திரிகையாளர் ஹெல்லே லிங் வெளியிட்ட பதிவிற்கு நார்வே நாட்டில் உள்ள இந்திய தூதரகம் பதிலளித்துள்ளது. இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமரின் பயணம் தொடர்பாக, இந்திய தூதரகம் இன்று இரவு 9.30 மணிக்கு ராடிசன் ப்ளூபிளாசா ஓட்டலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் தாராளமாக வருகை தந்து உங்கள் கேள்விகளைக் கேட்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com