ஈரான் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ராஜினாமா

இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க லாபியின் அழுத்தம் காரணமாகவே இந்த போர் நடக்கிறது என ஜோ கென்ட் கூறியுள்ளார்.
ஈரான் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ராஜினாமா
Published on

வாஷிங்டன்,

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.

இந்தநிலையில், ஈரானுடனான போர் காரணமாக, ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தேசிய உளவுத்துறை இயக்குநர் ஆகிய இருவருக்கும் 'பயங்கரவாத' அச்சுறுத்தல்கள் குறித்து ஆலோசனை வழங்கி வந்த அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் பதவியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

நடைபெற்று வரும் போரை தனது மனசாட்சிக்கு விரோதமாக ஆதரிக்க முடியாது என தனது ராஜினாமா கடிதத்தில் ஜோ கென்ட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'ஈரான் நமது நாட்டிற்கு எந்த உடனடி அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை, மேலும் இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த அமெரிக்க ஆதரவுக் குழுவின் அழுத்தத்தின் காரணமாகவே நாம் இந்தப் போரைத் தொடங்கினோம் என்பது தெளிவாகிறது' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற டிரம்பின் கடந்தகால கூற்றுகளையும் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் .இதற்கிடையில் வெள்ளை மாளிகை ஜோ கென்ட் ராஜினாமா தொடர்பாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

அமெரிக்கச் சட்டத்தின்படி, அந்நாட்டு ஜனாதிபதி ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென்றால், நாடாளுமன்ற ஒப்புதலை பெறவேண்டும்.

ஒரு தாக்குதல் 'உடனடியாக' நடக்கப்போகிறது என்ற சூழலில் மட்டுமே ஜனாதிபதி தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் உண்டு. அமெரிக்கா ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக கூறி போரைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஈரான் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட் ராஜினாமா செய்துள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com