

லிவிவ்,
உக்ரைனில் தரை, வான், கடல் என மும்முனை போருக்கு மத்தியிலும், மனிதாபிமான அடிப்படையில் மரியுபோல், வோல்னோவாகா நகரங்களில் நேற்றுமுன்தினம் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு ரஷியாவும், உக்ரைனும் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டினர். இதனால் போரினால் சிக்கித்தவித்து வந்த மக்கள் அந்த நகரங்களில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்த நிலையில், இரு ரஷிய ஆதரவு பிரிவினைவாத பிராந்தியங்களின் ஒன்றான டொனெட்ஸ்க் ராணுவ தலைவர் எட்வர்டு பசுரின், இரு நகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படும், மக்கள் பாதுகாப்பாக வெளியேற பாதைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார். இதை உக்ரைன் அதிகாரிகளும் உறுதி செய்தனர். உள்ளூர் நேரப்படி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இது நடைமுறையில் இருக்கும் என அறிவித்தார்.
மரியுபோல் நகரம், ரஷிய படையின் கடுமையான முற்றுகையின் கீழ் உள்ளது. குடியிருப்பு பகுதிகள் மீது இடைவிடாத குண்டுவீச்சு நடக்கிறது. கனரக பீரங்கி ரகங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை அந்த நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்தார்.
மரியுபோல் நகரில் நேற்றும் பொதுமக்களை வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது. சண்டையை நிறுத்தி பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடக்காமல் போனதற்கு மறுபடியும் உக்ரைனும், ரஷியாவும் ஒன்றையொன்று காரணம் காட்டி குற்றம் சாட்டின.
அறிவித்தபடி, சண்டை நிறுத்தம் நடைபெறவில்லை, பொதுமக்கள் வெளியேற்றப்படவும் இல்லை என்பதை உக்ரைன் உள்துறை அமைச்சக ஆலோசகர் ஆண்டன் ஜெராஷ்செங்கோவும் உறுதி செய்தார்.
சண்டை நிறுத்தம் நடைபெறாதது, பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
உக்ரைன் மீதான 11 நாள் போரில் 11 ஆயிரம் ரஷிய படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மிக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.
மேலும் 300 டாங்குகள், 40 விமானங்கள், 48 ஹெலிகாப்டர்கள், டஜன் கணக்கிலான பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே உக்ரைன், ரஷியா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை திங்கட்கிழமை (இன்று) நடைபெறும் என்று உக்ரைன் தூதுக்குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா தெரிவித்தார். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்த பேச்சுவார்த்தையாவது திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.