உங்களுக்கு பீர் பிடிக்குமா? அப்படி என்றால் கொசுவுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்..!

பீர் குடிப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை குறித்து ஆய்வறிக்கை ஒன்றில் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்டர்டாம்,
உலகம் முழுவதும் மதுப்பிரியர்களின் விருப்பமான பானங்களில் ஒன்றாக பீர் விளங்கி வருகிறது. பீர் என்பது பார்லி போன்ற தானியங்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருளை நொதிக்கவைத்து தயாரிக்கப்படும் ஒரு மதுபானமாகும். இது உலகின் மிகப் பழமையான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் மதுபானங்களில் ஒன்றாக உள்ளது. பிற மதுபானங்களை குடிக்காதவர்கள் கூட பீர் குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், பீர் குடிப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை குறித்து ஆய்வறிக்கை ஒன்றில் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரேட்போட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பீர் குடிப்பதால் உடலில் ஏற்படும் ஒருவித வாசம் கொசுக்களை ஈர்ப்பதாகவும், இதன் காரணமாக பீர் குடிப்பவர்களை கொசுக்கள் அதிகம் கடிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் சன்ஸ்கிரீனை குறைவாக பயன்படுத்துவோர் மற்றும் தொடர்ந்து குளிக்காமல் இருப்பவர்கள் ஆகியோரையும் கொசுக்கள் அதிகம் கடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






