

வாஷிங்டன்,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பைசர், மாடர்னா, ஸ்புட்னிக்-வி, ஆஸ்ட்ரா செனகா என பல நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கின்றன. இந்த தடுப்பூசிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் 2 டோஸ்களாக செலுத்தப்படுகின்றன.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்ததால், 3-வதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்துவதற்கு பல நாடுகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகளில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களின் பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் 4 மாதத்தில் கணிசமாக குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 22-ந்தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2.40 லட்சம் பேர் மற்றும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 93 ஆயிரம் பேரின் மருத்துவ விவரங்கள் அடிப்படையில் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவிய காலத்தில் அவசர சிகிச்சைகளுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் 3-வது டோசுக்கு பிறகு இரண்டு மாதங்களில் 87 சதவீதமாக இருந்தது என்றும் 4-வது மாதத்தில் செயல் திறன் 66 சதவீதமாக குறைந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசியின் செயல் திறன் முதல் 2 மாதங்களில் 91 சதவீதமாக இருந்தது, ஆனால் 4-வது மாதத்தில் 78 சதவீதமாக குறைந்தது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.