காத்திருக்கும் 12 கோடி பேர் : டிக் டாக் உங்களை அடிமையாக்குகிறதா?

டிக்டாக் செயலியில் தங்கள் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
காத்திருக்கும் 12 கோடி பேர் : டிக் டாக் உங்களை அடிமையாக்குகிறதா?
Published on

டிக்டாக் மோகம் கணவர் கண்டிப்பு, வீடியோ வெளியிட்டு இளம் பெண் தற்கொலை, நாட்டுத் துப்பாக்கி வைத்து டிக் டாக் வீடியோ எடுத்த நண்பர்கள் - விபரீதத்தில் முடிந்த விளையாட்டு. சமீப காலமாக இதுதான் செய்தியாக உலாவருகிறது, இருந்தும் டிக் டாக் மோகம் குறைந்தபாடில்லை.

டிக்டாக் ஒரு சீன செயலி இதன் மூலம் குறும் நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் முடியும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிக்கு ஏற்ப நமது உடல் அசைவுகள் மூலம் காணொளி காட்சியாக்க உதவும் ஒரு திறன் பேசி மென்பொருள் டிக் டாக். 2016-ம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது.

சுமார் 15 வினாடிகள் அளவில் பதிவு செய்து பிறருக்கும் பகிர்ந்து கொள்ளலாம். இது இத்தகைய காணொளி உருவாக்கும் நபரை பெயரளவில் மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திறமையான மென்பொருள் ஆகும்.

பொதுவாக நடனம் நகைச்சுவை அதிகம் உருவாக்கி பதியப்படுகிறது. சாதாரண நபரையும் தனது சிந்தனைகளை ஆக்கங்களாக்க உதவுகிறது.

இந்தியாவில் டிக்டாக், ஹலோ, விகோ லைட் போன்ற செயலிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, பொழுதுபோக்கு விரும்பிகளை மெய்மறந்து ஆட வைத்துக் கொண்டிருப்பது பைட் டான்ஸ் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனம்..!

டிக் டாக் நிறுவனம் பல குறுகிய வீடியோக்களை ஸ்பெஷல் எபெக்டுடன் இந்த டிக் டாக் இணையதளத்தில் வெளியிட அனுமதித்துள்ளது. இது உலகளாவிய அளவில் பயன்படுத்தப்படும் பிரபலமான தளங்களில் ஒன்றாகும். உலகளாவிய அளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களில், இந்தியாவில் மட்டும் சுமார் 300 மில்லியன் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்துள்ளன.

ஆரம்பத்தில் மியூசிக்கலி (Musically) ஆக இருந்த ஆப் பின்னர் டிக் டாக் (Tik Tok) ஆக மாறியது. டிக் டாக் பயன்படுத்துவதற்கு மிக எளிமையானதாகவும், இந்த ஆப்-பில் கணக்கு தொடங்க வெறும் செல்போன் நம்பர் மட்டும் பதிவு செய்தால் மட்டுமே போதுமானதாக உள்ளது. 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் அக்கவுண்ட் தொடங்கலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் வழிகாட்டலுடன் பயன்படுத்தலாம் என்று அதன் விதிமுறையில் இருந்தாலும், பெரும்பாலானோர் விதிமுறைகளை படிப்பதில்லை என்பது தான் உண்மை.

டிக் டாக் ஆப்-ல் பாடல்கள், வசனங்கள், காமெடி வசனங்கள் ஆகியவற்றிற்கு டப்பிங் செய்யலாம். தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்து நடிக்கவோ, பாடவோ, ஆடவோ செய்யலாம். அதில் அதிகமாக டபுள் மீனிங் வசனங்களுக்கு வாயசைப்பது, ஆபாச உடைகள் அணிந்து டான்ஸ் ஆடுவது, சாதி ரீதியான வசனங்கள் பேசுவது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுவதால் இதற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. மாணவர்களும் இதை அதிகளவில் பயன்படுத்தி வருவதால், அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, இந்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் செயலிகளை இயக்குகிறது.

இந்தியாவில் பட்டிதொட்டிகளிலும், மாநகரங்களிலும், பெண்களும் ஆண்களும் டிக்டாக்கில் செய்கின்ற சேட்டைகளைப் பார்த்து ரசித்து, அதனை டிக் டாக்கில் பதிவிடுவதற்கான அனுமதியை வழங்குவதற்காகவே 500 பேர் கொண்ட பணியாளர் குழு 24 மணி நேரமும் பணியில் உள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டிக்டாக்கில் ஆபாசம் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடப்பட்ட 60 லட்சம் வீடியோக்களை டிக்டாக் பணியாளர்கள் அழித்துள்ளதாக, பைட் டான்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பெல்லே பல்டொஷா தெரிவித்துள்ளார்.

டிக்டாக்கில் 12 கோடி பேர் தங்களது வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும், ஹலோ செயலியில் 4 கோடி பேரும், விகோ செயலியில் 2 கோடி பேரும் தங்களது திறமைகளைக் காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் பெல்லே பல்டொஷா தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைகாலமாக பல்வேறு சர்ச்சையில் சிக்கி உள்ள டிக்டாக் செயலியை பாதுகாப்பானதாக மாற்ற 13 விதிகளுடன் செயல்பாட்டை மேம்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 13 வயதுக்குட்பட்டோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தாமல் இருக்கவும், ஒருவர் அதிகபட்சம் எத்தனை நிமிடங்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என்ற நேரக் கட்டுப்பாடும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலிக்கு முகநூல் போல கடவுச்சொல்லை பயன்படுத்தும் முறை செயல்பாட்டில் உள்ளதாகவும், டிக்டாக் செயலியில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு ஆபாச வன்முறை வீடியோக்கள் உடனடியாக நீக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கான 13 விதிகள் அடங்கிய உத்தரவாதத்தை கொடுத்த பின்னரே இந்தியாவில் டிக்டாக்கிற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டதாக பெல்லே பல்டொஷா(belle baldoza) தெரிவித்தார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் டிக்டாக் செயலியை முன்வைத்து தற்கொலை, சாதி பிரச்சினை , ஆபாச பேச்சு, கலாச்சார சீரழிவு போன்ற சர்ச்சைகள் எழுவதால் அது தொடர்பாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணையும், கண்காணிப்பு அதிகாரி ஒருவரையும் பணி அமர்த்தி உள்ளதாக பெல்லே பல்டொஷா((belle baldoza)) தெரிவித்தார்.

தற்கொலை செய்யும் எண்ணத்தில் இனி யாராவது வீடியோ பதிவிட்டால் அவர்களது செல்போனிற்கு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கும் புதிய தொழில்நுட்பம் திங்கட்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் பெல்லெ பல்டொஷா(belle baldoza) தெரிவித்தார்.

டிக்டாக் செயலி மூலம் இந்தியாவில் விளம்பர வருவாயாக மட்டும் பல நூறு கோடிகளை குவிக்கும் பைட் டான்ஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனம், இந்தியாவில் இனி தடை விதிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

டிக்டாக்கில் பெண்கள் அதிகளவில் வீடியோக்களை பகிர்வதால், அவர்களுக்கு தெரியாமலேயே அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதனால் பெண்களுக்கு பாதிப்புக்கள் அதிகம் என்று கூறுகின்றனர் மனநல மருத்துவர்கள். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் தான் டிக் டாக்-ஐ அதிகளவில் பயன்படுத்துவதாக கூறும் அவர்கள், இது ஒரு மனநோய் எனவும், இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்துமே டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய உலகில், எந்த ஒரு தொழில்நுட்பத்திற்கும் அடிமையாகாமல் அதன் பயன்களை அனுபவிக்கலாமே தவிர அதிலேயே மூழ்கிக் கிடப்பதால் பாதிப்பு ஏற்படுவது நமக்கு மட்டும் தான்.

* 154 நாடுகளில் டிக் டாக்செயலி இயங்குகிறது.

* இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான ஆக்டிவ் பயனாளர்கள் உள்ளனர்

* சீனாவில் 150 மில்லியன் மக்கள் செயலியை தினமும் பயன்படுத்துகிறார்கள்.

*16-24 வயதுடையவர்கள் 41 சதவீதம் பயன்படுத்துகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com