‘ராணுவ நடவடிக்கை’ வடகொரியாவிற்கு டொனால்டு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது தாக்குதல் என வடகொரியா எல்லை மீறி உள்ளநிலையில் டொனால்டு டிரம்ப் இறுதி எச்சரிக்கையை விடுத்து உள்ளார்.
‘ராணுவ நடவடிக்கை’ வடகொரியாவிற்கு டொனால்டு டிரம்ப் இறுதி எச்சரிக்கை
Published on

வாஷிங்டன்,

கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா செயல்பட்டு வருகிறது. டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் வடகொரியா செயல்பாட்டிற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

எச்சரிக்கையையும் மீறி வடகொரியா செயல்பட்டதால் அந்நாட்டு மீதான பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கையை மேற்கொண்டது.

அமெரிக்கா வடகொரியா மீதான பொருளாதார தடையை கடினமாக்குவது தொடர்பான தீர்மானத்தை வரையறை செய்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தது. வடகொரியாவுடன் 90 சதவித பொருளாதார நடவடிக்கையை கொண்டு இருப்பது அதனுடைய நட்பு நாடான சீனாவாகும். வடகொரியாவின் அடாவடி நடவடிக்கையின் போது எல்லாம் சீனா நடவடிக்கை எடுக்க தவறுவதாக டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டிவந்தார். வடகொரியா மீதான பொருளாதார தடையை வலுப்படுத்துவதற்கு சீனாவும், ரஷியாவும் எதிர்ப்பு தெரிவித்தன. பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், புதிய பொருளாதார தடைகளால் ஒன்றும் நடக்காது என கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இவ்விவகாரத்தில் உறுதியாக இருந்தன.

வடகொரியாவின் மீது கடும் பொருளாதார தடை கொண்டுவர சீனாவிற்கும் அமெரிக்கா கடும் நெருக்கடியை கொடுத்தது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த வலுவான பொருளாதார தடை தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது 4 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா விடுத்துள்ள மிரட்டல், உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

அடுத்த சில தினங்களில் இதற்கான திட்டத்தை வடகொரியா இறுதி செய்யப்போவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

வடகொரியாவின் வாசோங்12 ஏவுகணைகள், ஜப்பானின் மீது பறந்து சென்று குவாம் தீவுக்கு அருக 30 கி.மீ. தொலைவில் கடலில் விழும் என தெரிகிறது. குறிப்பாக ஜப்பானின் ஷிமானே, ஹிரோஷிமா, கொய்ச்சி மாகாணங்களின் மீது அந்த ஏவுகணைகள் பறந்து செல்லும். குவாமை குறி வைத்து வடகொரியா ஏவுகணைகளை ஏவினால், அந்த ஏவுகணைகளை சட்டப்படி இடைமறிக்க முடியும் என்று ஜப்பான் கூறிஉள்ளது. ஆனால் குவாம் தீவு மீது செலுத்தப்படுகிற ஏவுகணையை சுட்டுத்தள்ளும் திறன், ஜப்பானிடம் தற்போது இல்லை என்று வல்லுனர்கள் கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரியா தன்னுடைய தாக்குதல் திட்டத்தில் நகர்வு கொண்டிருப்பதாக கூறும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இறுதி எச்சரிக்கையை விடுத்து உள்ளார்.

வடகொரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை முழு தயார் நிலையில் உள்ளது என டொனால் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்

வடகொரியா தொடர்ச்சியாக முட்டாள் தனமாக செயல்பட்டால் ராணுவ தீர்வானது முழு தயார் நிலையில் நிலைக்கொண்டு உள்ளது. கிம் ஜோங் உன் மற்றொரு வழியை தேர்வு செய்வார் என நம்புகின்றேன் என டொனால்டு டிரம்ப் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com