

லண்டன்,
அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 95 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) அளித்த பரிந்துரையை இங்கிலாந்து அரசாங்கம் இன்று ஏற்றுக்கொண்டது. அடுத்த வாரம் முதல் பைசர் கொரோனா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தலாம் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, ''இது அற்புதமான செய்தி. கொரோனா தடுப்பு மருத்தின் உற்பத்தி நமது வாழ்க்கையை இயல்பு நிலைக்குத் திருப்பும். நமது பொருளாதாரம் மீண்டும் நகரும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடிந்துவிட்டதாக அப்பாவியாக நம்பாதீர்கள் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், இன்று, இங்கிலாந்தில், பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளைத் திறந்து, தேசிய கட்டுப்பாடுகளை முடித்துவிட்டோம். அதிகப்படியான நம்பிக்கையுடன் நாம் கொண்டு செல்லப்படாமல் இருப்பது முக்கியம். கொரோவுக்கான போராட்டம் முடிந்துவிட்டது என்ற அப்பாவியான நம்பிக்கையில் மக்கள் இருக்கக்கூடாது.
எப்படி இருந்தாலும், தடுப்பூசி இறுதியாக விநியோகிக்கத் தொடங்கும் போது மிகப்பெரிய தளவாட சவால்கள் இருக்கும். மருந்து குப்பிகள்-70 டிகிரி செல்சியசில் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் மூன்று வாரங்கள் இடைவெளியில் இரண்டு ஊசி தேவைப்படுகிறது, எனவே கிட்டத்தட்ட பாதிக்கப்படக்கூடியவர்கள் பாதுகாக்கப்படுவதற்கு தவிர்க்க முடியாமல் சில மாதங்கள் ஆகும் என்று கூறினார்.