

தெஹ்ரான்,
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து இன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது சுமார் 30 ஏவுகணைகளை ஈரான் செலுத்தியது. மேலும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய குடிமக்கள் செய்திகளை கண்காணிக்கவும், விழிப்புணர்வுடன் இருக்கவும், இந்திய தூதரகத்தில் இருந்து வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.