

அமெரிக்காவுடன் உடன்பாட்டுக்கு வராவிட்டால், ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், நெருப்புடன் விளையாட வேண்டாம் என தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுடன் ஈரான் உடன்பாட்டுக்கு வராவிட்டால், மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப் கூறியதாவது:
ஈரானுக்கு எதிராக மீண்டும் ஒரு பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளலாம். அல்லது அவர்கள் உடன்பாட்டுக்கு வரலாம். ஈரான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம் என்று கூறுவார்கள்” என்றார். ஈரான் மீது இந்த வார இறுதிக்குள் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கத் தூதர் டாம் பாரக் தெரிவித்த சில மணி நேரங்களில் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
டிரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான், அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்தினால், வளைகுடா பகுதியில் உள்ள கடலுக்கு அடியில் அமைந்துள்ள தகவல் தொடர்பு கேபிள்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்துள்ளது. இது குறித்து ஈரான் அதிகாரி கூறுகையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இனி எந்த எல்லைக் கட்டுப்பாடுகளும் இருக்காது.
கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் முதல் ரகசிய ராணுவத் தளங்கள் வரை அனைத்தும் இலக்காக இருக்கும். நெருப்புடன் அமெரிக்கா விளையாட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படுமா அல்லது மீண்டும் ராணுவ மோதல் வெடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.