

வாஷிங்டன்
ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் பெண்மணி அவரது மனைவி, ஜில் பைடன்.
ஆங்கில ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் வெள்ளை மாளிகையில் இனி வீற்றிருப்பார்.
ஜில் முதல் கணவர் கல்லூரி கால்பந்து வீரர் பில் ஸ்டீவன்சன்.
ஜோ பைடனுக்கும் இவர் இரண்டாவது மனைவிதான். அவரது முதல் மனைவியும் ஒரு வயது மகளும் 1972ல் நடந்த ஒரு கார் விபத்தில் இறந்தனர். பியூ, ஹண்டர் என்ற அவரது இரு மகன்களும் அந்த விபத்தில் தப்பிப் பிழைத்தனர்.
அப்போது பிழைத்த இந்த இருவரில், பியூ பைடன், தமது 46வது வயதில் 2015ம் ஆண்டு மூளைப் புற்று நோயால் இறந்தார்.
அந்த விபத்து நடந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஜோவின் சகோதரர் தம்மை அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததாக கூறுகிறார் ஜில் பைடன். அப்போது அவர் செனட்டராக இருந்தார்.
"அப்போது நான் ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்ட பையன்களோடு மையல் கொண்டிருந்தேன். இவர் ஸ்போர்ட்ஸ் கோட், ஷூ போட்டுக்கொண்டு என் வாசலுக்கு வந்தார். கடவுளே... லட்ச ஆண்டுகள் ஆனாலும் இவரோடு நமக்கு ஒத்துவராது என்று நினைத்தேன். அவர் என்னைவிட 9 வயது மூத்தவர். நாங்கள் இருவரும் ஒரு ஆணையும் பெண்ணையும் பார்க்க ஃபிளடெல்ஃபியாவில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சென்றோம்."
ஐந்து முறை ஜோ காதலை சொன்ன பிறகே நான் அவரை ஏற்றுக்கொண்டேன். "ஜோவின் பிள்ளைகள் மீண்டும் ஒரு தாயைப் பெற்று இழக்கக்கூடாது. எனவே 100 சதவீதம் உறுதி செய்துகொண்டு முடிவெடுக்க விரும்பினேன்.
இந்த ஜோடி 1977ம் ஆண்டு நியூயார்க் மாநகரில் திருமணம் செய்துகொண்டது. இவர்களது மகள் அஷ்லே 1981ல் பிறந்தார்.
தற்போது 69 வயதாகும் ஜில் பைடன் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
ஒரு இளநிலைப் பட்டமும், இரண்டு முதுநிலைப் பட்டங்களும் பெற்றவர். அத்துடன் டெலாவேர் பல்கலைக்கழகத்தில் இருந்து 2007ம் ஆண்டு கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் ஜில்.