

கார்ட்டூம்,
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரத்தைக் கைப்பற்ற உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இத்தகைய போர் பதற்றத்துக்கு மத்தியில், சூடான் மற்றும் தெற்கு சூடான் நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைப் பகுதியான 'அபியே' என்ற எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தில் உள்ள சந்தையைக் குறிவைத்து, சூடான் ராணுவத்தினர் டிரோன் விமானங்கள் மூலம் அடுத்தடுத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
சந்தையில் இருந்த எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் குண்டுகள் விழுந்து வெடித்ததால், அந்தப் பகுதியே நொடிப் பொழுதில் பெரும் தீக்கிரையானது. இதில் ஏற்கனவே 73 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 153-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடி வருவதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.