சீன கடலோரம் பறந்த ஆளில்லா விமானம்; சுட்டு வீழ்த்திய தைவான் ராணுவம்

தைவான் கட்டுப்பாட்டுக்குள் உள்ள, சீன கடலோர பகுதியில் அமைந்த தீவின் வான்பரப்பில் பறந்த ஆளில்லா விமானம் ஒன்றை தைவான் ராணுவம் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளது.
சீன கடலோரம் பறந்த ஆளில்லா விமானம்; சுட்டு வீழ்த்திய தைவான் ராணுவம்
Published on

தைப்பே,

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு, சுயாட்சி பகுதியாக செயல்பட்டு கொண்டிருக்கும் தைவான் நாட்டுக்கு கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டார்.

25 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்காவின் உயர் பொறுப்பில் உள்ள ஒருவர், தைவானுக்கு சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது. பெலோசியின் இந்த சுற்றுப்பயணம் சீனாவால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பெலோசி தைவானில் இருந்து புறப்பட்டு சென்றதும், தனது படைபலம் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ள செய்யும் வகையில், தைவானை சுற்றி ராணுவ போர் பயிற்சிகளை பல நாட்களாக சீனா நடத்தியது. இதனால் போர் பதற்றம் தொற்றி கொண்டது.

இதன்பின்பு, போர் பயிற்சி நிறுத்தப்பட்டது. இது ஒருபுறம் இருக்க பைடன் அரசாங்கம் தைவானுக்கு போர் விமானங்களுக்கான ஏவுகணைகள் உள்ளிட்ட ரூ.8,772 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.

இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு பைடன் அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில், தைவானின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள, சீன கடலோரத்தில் அமைந்த தடை செய்யப்பட்ட ஷியு தீவின் வான்வெளியில் அடையாளம் தெரியாத ஆளில்லா விமானம் ஒன்று இன்று மதியம் 12.30 மணியளவில் பறந்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை கவனித்த தைவான் ராணுவம் அதனை சுட்டு வீழ்த்தி உள்ளது. இதனை தைவான் ராணுவ அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட பகுதியில் பாதுகாப்பை பராமரிப்பதற்காக தேடுதல், கண்காணிப்பு ஆகிய பணிகள் நீடிக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இதேபோன்றதொரு சம்பவம் கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்தது. தைவானின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள தடை செய்யப்பட்ட தீவு பகுதியின் வான்வெளியில் பறந்த சீன ராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்றை தைவான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்திற்கு பின்பு, தைவான் ஜலசந்தி பகுதியில் போர் பயிற்சிகளில் சீனா ஈடுபட தொடங்கியது. கடந்த வாரம் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மார்ஷா பிளாக்பர்னின் தைவான் வருகையால் ஆத்திரமடைந்த சீனா, கடல் மற்றும் வான்பரப்பில் மீண்டும் போர் பயிற்சிகளில் ஈடுபட்டது. இதனால், அந்த பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்ற நிலை நீடித்தது.

கடந்த ஆகஸ்டு மத்தியில் இருந்து, தைவானின் முக்கியத்துவம் வாய்ந்த கின்மென் தீவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் எண்ணற்ற ஆளில்லா விமானங்கள் பறந்து சென்றன. இந்த பகுதி, சீனாவில் இருந்து 10 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது.

ஒரு கட்டத்தில், தைவான் ராணுவ நிலை மீது பறந்து சென்ற சீன ஆளில்லா விமானம் மீது, முகமூடி அணிந்த தைவான் வீரர்கள் கற்களை வீசி எறிந்து விரட்டிய சம்பவமும் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com