வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக டிரோன்கள்..!! தென்கொரிய அதிபர் உத்தரவு

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக டிரோன்களை தயாரிக்க தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் உத்தரவிட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சியோல்,

தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மீது தொடர் ஏவுகணை சோதனை, டிரோன் தாக்குதல் போன்றவற்றை வடகொரியா நடத்தியது. எனவே கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் நிலவி வந்தது.

இதனால் வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்க தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு வடகொரியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

டிரோன் தாக்குதல்

ஆனால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதால் கடந்த ஆண்டு இறுதியில் தென்கொரியாவின் கங்வாடோ தீவு மற்றும் தலைநகர் சியோல் ஆகிய பகுதியில் வடகொரியா 5 டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனை தென்கொரிய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். எனினும் இந்த சம்பவம் அங்கு போர்ப்பதற்றத்தை அதிகரித்தது.

இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக டிரோன்களை உருவாக்க தென்கொரியா முடிவு செய்தது. இதற்கான கொள்கை தென்கொரிய ராணுவத்தால் கடந்த மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முக்கிய மைல்கல்

இந்தநிலையில் டிரோன்களை உருவாக்குவதற்கான உத்தரவில் தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் நேற்று கையெழுத்திட்டார். அதன்படி டிரோன்கள் தயாரிக்கும் பணி வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் எனவும், சுமார் 10 டிரோன்கள் வரை வடகொரியா மீது செலுத்தப்படும் எனவும் கருதப்படுகிறது.

இது தொடர்பாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், `டிரோன்களை பயன்படுத்துவதன் மூலம் போர்க்களத்தில் முறையாகவும், திறமையாகவும் செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடகொரியாவின் போர் நடவடிக்கைகளை கண்காணிக்க இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்' என கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com