போதை பொருள் கடத்தல் தலைவன் படுகொலை; மெக்சிகோவில் வன்முறை பரவல்: 25 வீரர்கள் பலி

20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போதை பொருள் கடத்தல் தலைவன் படுகொலை; மெக்சிகோவில் வன்முறை பரவல்:  25 வீரர்கள் பலி
Published on

மெக்சிகோ சிட்டி

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கடத்தல் தொழிலை பரவலாக செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் இந்த கும்பல்களை ஒழிக்க முடியாமல் அரசு திணறியது. நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் அரசியல் தலைவர்களை இந்த கும்பல் சுட்டு கொலை செய்து விடுகிறது.

இந்த சூழலில், அந்நாட்டின் சக்தி வாய்ந்த ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் என்ற சர்வதேச அளவிலான போதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் தலைவனாக நெமசியோ ஓஸ்குவெரா என்பவர் இருந்து வந்துள்ளார்.

கடத்தல் கும்பல்கள் இடையே எல் மென்சோ என்ற பெயரில் பரவலாக அறியப்படுகிறார். இந்நிலையில், மெக்சிகோ ராணுவத்துடன் இணைந்து சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, ஜாலிஸ்கோ பகுதியில் போர்ட்டோ வல்லார்தா என்ற இடத்தில் வைத்து மென்சோவை படையினர் சுட்டு கொன்றனர்.

இந்த தகவல் அறிந்ததும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர். இதனால், போர்ட்டோ வல்லார்தா, குவாதலஜாரா மற்றும் தபல்பா நகரங்களில் வன்முறை பரவியது. சாலை மறியல், அரசு பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிப்பு போன்ற சம்பவங்கள் மாகாணம் முழுவதும் காணப்படுகிறது. முக்கிய நகரங்களில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கலவரக்காரர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதுபற்றி பாதுகாப்பு செயலாளர் உமர் கார்சியா ஹர்புக் மற்றும் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கூறும்போது, இதில், மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஜாலிஸ்கோவில் தனித்தனியாக 6 இடங்களில் நடந்த வன்முறையின்போது தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் 25 பேர் பலியானார்கள் என்றனர். இதேபோன்று கார்சியா கூறும்போது, இந்த மோதலில் ஜாலிஸ்கோவில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் 30 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

அருகேயுள்ள மிச்சோவாகனில் 4 பேர் கொல்லப்பட்டனர் என்றார். மென்சோ படுகொலை பற்றி அறிந்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கினர். படையினருக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்தன. 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து முடங்கியது. அவர்களுக்கு எதிராகவும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கூடுதலாக 2,500 பாதுகாப்பு படையினர் குவிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ரிகார்டோ டிரெவில்லா கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com