

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமானநிலையத்திலிருந்து, கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டது.
அப்போது விமானத்தில் இலங்கையை சேர்ந்த பயணி ஒருவர் போதையில் விமானி அறைக்குள் நுழைய முயன்றார் உடனடியாக அவரை விமான ஊழியர்களும் சில பயணிகளும் வளைத்து பிடித்தனர்.
இருக்கை பெல்டை கொண்டு அந்த நபரை அவர்கள் கட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை, மெல்பர்ன்
நகர் விமான நிலையத்தில், அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணியை, விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.இலங்கையைச் சேர்ந்த அந்தப் பயணி, மதுபேதையில் இருந்ததுபோல் தோன்றியதாக, மலேசிய அதிகாரிகள் கூறினர்.
இது குறித்து மலேசிய போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் அப்துல் அசீஸ் கூறுகையில், இது ஒரு விமான கடத்தல் முயற்சி இல்லை. அவர் தீவிரவாதியும் இல்லை. பயணி ஒருவர், விமானிகளுக்கு இடைஞ்சல் அளிக்கும் விதமாக விமானிகளின் அறைக்குள் நுழைய முயற்சித்தார்.
இதையடுத்து தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, குறிப்பிட்ட இலங்கை பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையில் அந்த பயணியிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை. மாறாக ஒரு பவர்பாங்க் மட்டும் இருந்திருக்கிறது. அந்த பயணி குடிபோதையில் விமான பணியாளர்களிடம் தகராறு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செயல்பட்டதால் இலங்கை பயணியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.