இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று அமீரகம் வருகை

இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக இன்று (புதன்கிழமை) அமீரகம் வருகிறார்.
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று அமீரகம் வருகை
Published on

அபுதாபி,

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றார். இதில் முதலாவதாக பக்ரைன் நாட்டிற்கு சென்றார். அமெரிக்க தலையீட்டிற்கு பிறகு அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே இணக்கமான தூதரக நட்புறவு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைக்கு பிறகு அவர் முக்கிய தலைவர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

பக்ரைன் நாட்டிற்கு சென்ற அவர் இந்தியாவின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீபா பின் சல்மான் அல் கலீபாவுக்கு அங்குள்ள முக்கிய தலைவர்களிடம் இரங்கல் தெரிவித்தார். அதன் பிறகு இன்று (புதன்கிழமை) அமீரகத்திற்கு வருகை புரிய உள்ளார். இதில் நாளை (வியாழக்கிழமை) அவர் அபுதாபியில் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யானை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு பிரதேச ரீதியிலான விவகாரங்கள் பேசப்பட உள்ளது. அமீரகத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் பலர் கொரோனா பாதிப்பு காலத்தில் வெளியேறி படிப்படியாக அமீரகத்திற்கு திரும்பி வருகின்றனர்.

குறிப்பாக கொரோனா பாதிப்பு காலத்திற்கு பிறகு இந்தியர்கள் தங்கள் பணிகளுக்கு திரும்புவதில் உள்ள சிரமங்கள் மற்றும் மீண்டும் அவர்கள் எளிதாக வரும் வகையிலான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பலமுறை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி அமீரக வெளியுறவு மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய-அமீரக கூட்டு ஆணைய கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாளை நடைபெறும் சந்திப்பில் நேரடியாக பல்வேறு விவகாரங்கள் இருநாடுகளுக்கு இடையே இரு மந்திரிகளும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது. அதனை முடித்துக்கொண்டு மத்திய மந்திரி ஜெய்சங்கர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) செசல்ஸ் நாட்டிற்கு செல்கிறார். அங்கு அவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் ஜனாதிபதி வேவல் ராம்கல்வானை சந்தித்து பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com