

மெக்ஸிகோ சிட்டி,
மெக்ஸிகோவில் கடலோர மாகாணமான சியபஸ் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 8.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், வானுயர்ந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் சேதம் விவரங்கள் குறித்து முழுமையான தகவல் ஏதும் வெளியாகவில்லை. பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் மூன்று மணி நேரங்களில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோ கடற்கரை, கவுதமாலா, எல் சல்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா ஹோண்டரஸ் மற்றும் ஈகுவடார் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அமெரிக்க மேற்கு கடற்கரை அல்லது பிரிடிச் கொலம்பியா பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு மெக்ஸிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.