இலங்கையில் மனித வெடிகுண்டாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்

இலங்கையில் தொழில் அதிபரின் மகன்கள் 2 பேர், மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இலங்கையில் மனித வெடிகுண்டாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்
Published on

இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கரவாதிகள் ஞாயிறு அன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் அதில் ஒருவர் பெண் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை முன்னெடுத்தவர்கள் உள்ளூர் தீவிரவாதிகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே பேசுகையில், வெடிகுண்டு தாக்குதல் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பால் நடத்தப்படவில்லை, அதிலிருந்து பிரிந்துச் சென்ற தீவிரவாத எண்ணம் கொண்ட குழுவால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் தீவிரவாத குழுவிற்கு வெளிநாட்டு தொடர்பு தொடர்பாக எதுவும் தெரியவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் 30-க்கும் அதிகமானோரை கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் நடுத்தர வசதிப்படைத்தவர்கள், நன்கு படித்தவர்கள். வெளிநாடுகள் சென்றும் படித்தவர்கள் என்றும் இலங்கை அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, கொழும்பு நகரில் ஒரு மசாலா நிறுவனத்தை நடத்தி வரும் தொழில் அதிபரின் 2 மகன்கள், மனித வெடிகுண்டாக செயல்பட்டுள்ளனர். ஒருவன், ஷாங்கிரிலா ஓட்டலிலும், மற்றொருவன் சின்னமன் கிராண்ட் ஓட்டலிலும் குண்டுகளை இயக்கி வெடிக்கச் செய்துள்ளனர். ஒருவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் படித்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். இயக்கத்துடனான தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பயங்கரவாதிகள், நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்று பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தெரிவித்தார். நாட்டில் இன்னும் பயங்கரவாதிகளும், வெடிகுண்டுகளும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, பயங்கரவாதிகள் எச்சரிக்கை எதுவும் விடுக்காமல் மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com