பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை

பறவை காய்ச்சல் எதிரொலியாக அமீரகத்துக்கு ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட 4 நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
Published on

அபுதாபி,

இது குறித்து அமீரக பருவ நிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் வசித்து வரும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு இந்தியா, ஓமன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பறவைகளும், பறவை தொடர்பான பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு சில நாடுகளில் பறவை காய்ச்சல் நோய்கள் இருப்பதால், நெதர்லாந்து, ஜெர்மனி நாடுகளில் இருந்தும், ரஷியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாட்டின் சில பகுதிகளில் இருந்தும் பறவைகளும், அவை தொடர்பான பொருட்களையும் இறக்குமதி செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு கொடுத்துள்ள வழிகாட்டுதலுக்கு ஏற்ப இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் காரணமாக பறவைகளின் முட்டைகள், பறவைகள் மற்றும் அதன் குஞ்சுகள், அதன் துணை தயாரிப்புகளும் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து விலங்குகள் விற்பனை செய்யப்பட்டு வரும் மார்க்கெட்டுகள் அனைத்தும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட்டுகளில் இருந்து வரும் பறவைகள் சுகாதாரத்துடன் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்தும், ரஷியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாட்டின் சில பகுதிகளில் இருந்தும் பறவைகள் சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்படாத வகையில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக துறைமுகப் பகுதிகளில் சிறப்பு குழு ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com