ஜனாதிபதி டிரம்புடன் மோதல் எதிரொலி: அமெரிக்க ராணுவ மந்திரி ‘திடீர்’ ராஜினாமா

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்புடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி டிரம்புடன் மோதல் எதிரொலி: அமெரிக்க ராணுவ மந்திரி ‘திடீர்’ ராஜினாமா
Published on

வாஷிங்டன்,

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இதைப்பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் காலூன்றி ஆதிக்கம் செலுத்தினர். பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் அங்கு சென்றன. ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டன.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். இது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

டிரம்பின் இந்த முடிவில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிசுக்கு (வயது 68) உடன்பாடு இல்லை. இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு சென்று ஜனாதிபதி டிரம்பை சந்தித்துப்பேசினார். அப்போது அவர் சிரியாவில் அமெரிக்க படைகள் தொடர்ந்து இருக்க வேண்டியதின் அவசியத்தை டிரம்பிடம் விளக்கியபோதும் அவர் அதை ஏற்றுக்கொள்ளாமல், தன் நிலையில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் டிரம்பிடம் நேரடியாக தனது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இதை ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பதிவுகளில் உறுதி செய்தார். அவற்றில் அவர், பிப்ரவரி மாதம் இறுதியில் ஜேம்ஸ் மேட்டிஸ் விடைபெற்றுச்செல்வார் என தெரிவித்தார். அதே நேரத்தில் அடுத்த ராணுவ மந்திரி யார் என அவர் குறிப்பிடவில்லை. விரைவில் புதிய ராணுவ மந்திரி நியமிக்கப்படுவார் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் மேட்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தில் டிரம்பின் கொள்கைகளில் தனக்கு உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், எனது பதவியை ராஜினாமா செய்கிற உரிமை எனக்கு உள்ளது. உங்கள் கருத்துக்களோடு சிறப்பாக ஒத்து போகிற ஒருவரை ராணுவ மந்திரியாக நியமித்துக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு என கூறி உள்ளார்.

ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி விலகல், அமெரிக்காவில் ஆளுங்கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

நாடாளுமன்ற செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சி தலைவராக உள்ள மிட்ச் மெக்கன்னல், ஜனாதிபதி டிரம்புடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் பதவி விலகி உள்ளார் என்பது துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறி உள்ளார்.

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தலைவராக உள்ள நான்சி பெலோசி, இந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். டிரம்ப் நிர்வாகத்தில் உறுதிப்பாட்டின் குரலாக நம்மில் பலருக்கும் ஆறுதலாக இருந்தவர் ஜேம்ஸ் மேட்டிஸ் என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com