

ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது.
நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
மீண்டும் பொருளாதார தடை விதிக்கப்படும்
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மியான்மர் ராணுவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகளின் தலைவர்கள், ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் அந்த நாட்டின் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடி தாக்குதல் என அவர் சாடினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
ஒரு ஜனநாயகத்தில் எந்தவொரு சக்தியும் ஒருபோதும் மக்களின் விருப்பத்தை மீறவோ அல்லது நம்பகமான தேர்தல் முடிவை அளிக்கவோ முயற்சிக்க கூடாது. ஏறக்குறைய 10 ஆண்டுகாலமாக மியான்மர் மக்கள் தேர்தல்கள் மக்களாட்சி மற்றும் அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதை நிலைநாட்ட தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அந்த முன்னேற்றத்தை மதிக்க வேண்டும்.
சர்வதேச சமூகம் ஒன்று சேர வேண்டும்
மியான்மர் ராணுவம் தாங்கள் கைப்பற்றிய அதிகாரத்தை உடனடியாக கைவிடவும், அவர்கள் தடுத்து வைத்திருக்கும் தலைவர்களையும் அதிகாரிகளையும் விடுவிக்கவும், அனைத்து தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகளையும் நீக்கவும் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையில் இருந்து விலகவும் சர்வதேச சமூகம் ஒரே குரலில் ஒன்று சேர வேண்டும்.
இந்த கடினமான நேரத்தில் மியான்மர் மக்களுடன் நிற்பவர்களை அமெரிக்கா கவனித்து வருகிறது.
உலகெங்கிலும் உள்ள எங்கள் கூட்டாளிகளுடன் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் மறுசீரமைப்பை ஆதரிப்பதற்கும், மியான்மரின் ஜனநாயக மாற்றத்தை முறியடிப்பதற்கு முயற்சிக்கும் நபர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கும் நாங்கள் பணியாற்றுவோம்.
ஜனநாயகம் நோக்கிய முன்னேற்றத்தின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்கா மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியது. ஆனால் தற்போது மியான்மரில் மீண்டும் ஜனநாயகம் நசுக்கப்பட்டு ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி உள்ளது. அங்கு தொடர்ந்து ராணுவ ஆட்சி நீடித்தால் மியான்மர் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
ஜனநாயகம் எங்கு தாக்குதலுக்குள்ளானாலும் அங்கு அமெரிக்கா ஜனநாயகத்துக்கு ஆதரவாக நிற்கும்.
இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.