

க்விட்டோ,
ஈகுவேடார் நாட்டில் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள சரிவை ஈடுசெய்யும் விதமாக அந்நாட்டின் ஜனாதிபதி லெனின் மோரெனொ பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக கடந்த வாரம் அறிவித்தார். ஈகுவேடார் நாட்டில் எri பொருளுக்கான மானியம் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மானியங்களால் நாட்டிற்கு ஆண்டுதோறும் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவானதாக ஈகுவேடார் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனிமேல் இந்த செலவை அரசாங்கத்தால் ஏற்க முடியாது என்றும் இந்த மானியம் ரத்து செய்யப்படுவதாகவ்ம் ஜனதிபதி மோரெனொ அறிவித்தார். இந்த அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து பலர் வீதிகளிலும் நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். எரிபொருள் மானிய தடையால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
தலைநகர் க்விட்டொவில் வன்முரை அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி அரசாங்கத்தின் நிர்வாக கிளை கயக்வில் நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக மோரெனொ அறிவித்துள்ளார். இந்த வன்முறை எதிர்கட்சியின் தூண்டுதலால் நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனினும் எரிபொருள் மானியம் இனி வழங்கப்படமாட்டாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு மாதங்களுக்கு ஈகுவேடாரில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.