

பாரிஸ்,
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று லயான் எனும் நகரில் நடந்த உணவுத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது, அவர் மீது திடீரென ஒரு முட்டை வீசப்பட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த முட்டை அவர் மீது உடைந்து விழாமல் அவரின் தோளில் பட்டு கீழே விழுந்தது. ஒரு விநாடி திகைத்துப்போன அதிபர் நிலைமையை உணர்ந்து கொண்டார். உடனே அதிபரின் மெய்க்காப்பாளர்கள் இருவர் அவரை சுற்றிவளைத்து ஆசுவாசப்படுத்தி நிலைமையை எடுத்துரைத்தனர். அதற்குள் முட்டை வீச்சில் ஈடுபட்ட நபரை போலீசார் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
போலீசார் அந்த நபரை அழைத்துச் செல்ல அதிபர் இமானுவேல் மேக்ரோனோ, என்னிடம் சொல்ல ஏதாவது இருந்தால், அவர் வரலாம் என்று கூறியதையும் அந்த இடத்திலிருந்த செய்தியாளர்கள் பதிவு செய்தனர். முட்டை வீசியவர் யார், அவர் எதற்காக வீசினார் என்பது குறித்த எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. கடந்த ஜூன் மாதம் அதிபர் மேக்ரான் கன்னத்தில் ஒருவர் அறைந்தார். அந்த நபருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது முட்டை வீசப்பட்டச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.