தன் நிறுவன பெண் ஊழியருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை: 3-வது முறையாக தந்தையான எலான் மஸ்க்


தன் நிறுவன பெண் ஊழியருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை: 3-வது முறையாக தந்தையான எலான் மஸ்க்
x
தினத்தந்தி 23 Jun 2024 10:11 PM GMT (Updated: 24 Jun 2024 1:08 AM GMT)

தற்போது பிறந்துள்ள குழந்தை எலான் மஸ்க்கின் 12-வது குழந்தை என கூறப்படுகிறது.

வாஷிங்டன்,

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் பிரபல சமூக வலைதளமான 'எக்ஸ்' ஆகிய நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில் தன்னுடைய நியூராலிங்க் நிறுவனத்தின் ஊழியரான ஷிவோன் ஜிலிஸ் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

முதல் மனைவியான கனடாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜஸ்டினுடன் எலான் மஸ்குக்கு 6 குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை இறந்துபோனது. தொடர்ந்து 2-வது மனைவியான பிரபல பாடகி கிரிம்சுடன் எலான் மஸ்குக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு எலான் மஸ்க்-ஷிவோன் ஜிலிஸ் ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதன் மூலம் அவர் 11 குழந்தைகளுக்கு தந்தையானார்.

இந்த நிலையில் எலான் மஸ்க் 12-வது முறையாக தந்தையாகி உள்ளார். அவருக்கும், ஷிவோன் ஜிலிசுக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் 3-வது குழந்தை பிறந்ததாகவும், ஆனால் அதை அவர்கள் ரகசியமாக வைத்துள்ளதாகவும் புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள்தொகை குறைவு ஏற்படும் என்றும், அதிக அறிவுத்திறன் உடையவர்கள் நிறைய குழந்தைகள் பெற்றெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எலான் மஸ்க் தொடர்ந்து கூறிவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.


Next Story