

மனாமா,
இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது. இருப்பினும் முழுமையான ஆய்வு முடிவுகள் வெளியாகும் முன்பே கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன.
இதனையடுத்து தடுப்பூசி நிறுவனத்தின் சார்பில், அதன் செயல்திறன் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து, ஹாங் காங், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டது. மேலும் லான்செட் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், கொரோனாவின் தீவிரத்தன்மைக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டிருப்பதாகவும், டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 65.2 சதவீத செயல்திறன் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோவேக்சின் தடுப்பூசிக்கான சர்வதேச ஏற்றுமதி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில், தற்போது கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மையத்தின் அனுமதியை தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த தரவுகளின் அடிப்படையில், தங்கள் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திட அனுமதி அளிக்கப்படுவதாக பஹ்ரைன் நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.